
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வீரசோழபுரம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் அண்ணன், தம்பிக்கு இடையே நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. நேற்று குமார் ஆறுமுகத்துக்கு சொந்தமான 2 காளை மற்றும் 2 பசு மாடுகளை கத்தியால் வெட்டியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆறுமுகத்தின் மனைவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் மருத்துவர்கள் வராததால் கோபமடைந்த லலிதா தனது உறவினர்களுடன் இணைந்து மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டார். அப்போது மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், குமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் கால்நடை மருத்துவர் மாடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான குமாரை தேடி வருகின்றனர்.