விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாந்தோப்பு கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து பட்டா மாறுதலுக்காக கிருஷ்ணன் மாந்தோப்பு தலையாரி ராஜேஷ் கண்ணனை அணுகி பேசியுள்ளார். அப்போது ராஜேஷ் கண்ணன் தனக்கும், கிராம நிர்வாக அலுவலர் குமாருக்கும் 6000 ரூபாய் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். இதுகுறித்து கிருஷ்ணன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிருஷ்ணன் ராஜேஷ் கண்ணன் மூலம் கிராம நிர்வாக அலுவலர் குமாரிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் குமாரையும், ராஜேஷ் கண்ணனையும் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.