கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளதால் தினமும் ஏராளமானோர் அங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் காதலர்களிடம் இருந்து செல்போனை பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதுகுறித்து ஆர்.எஸ்.புரம், பெரிய கடை வீதி ஆகிய காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. எனவே போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் வாலாங்குளக்கரை பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் 4 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த சஞ்சய், மகேந்திரன், மௌலிதரன், சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் குளக்கரையில் காதல் ஜோடிகளை மிரட்டி செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதனால் போலீசார் 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.