கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் ரபேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி அந்த நிறுவன முதன்மை மேலாளர் கருணாகரன் என்பவரது பெயரில் ரபேலுக்கு மெயில் வந்தது. அதில் அவசரமாக ஒரு கூட்டத்திற்கு சென்றதால் வேறு ஒருவரின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப மறந்துவிட்டேன். அந்த வங்கி கணக்கு எண்ணுக்கு உடனடியாக பணம் அனுப்ப வேண்டும்.

நான் கூட்டத்தில் இருப்பதால் எனக்கு போன் செய்து தொந்தரவு அளிக்க வேண்டாம் என குறிப்பிட்டு இருந்தது. இதனை நம்பிய ரபேல் அந்த மெயிலில் இருந்த வங்கி கணக்கு எண்ணுக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். இதனையடுத்து அலுவலகத்திற்கு சென்று விசாரித்த போது அது போலியான மெயில் என்பதும், யாரோ ஒருவர் ரபேலிடம் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ரபேல் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, ரபேல் பணம் அனுப்பிய வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாதவாறு முடக்கி வைத்துள்ளோம். எனவே அந்த பணம் மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற மெயில்களின் உண்மை தன்மை அறிந்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு செயல்பட வேண்டும் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.