திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமையன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சநல்லூர்-மதுரை ரோட்டில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் உசேன் பையில் இருந்த 400 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனை பார்த்த உசேன் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் 2 பெண்களையும் பிடித்து தச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்செந்தூரை சேர்ந்த சாந்தி(50), அவரது மகள் ராசாத்தி(20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, தங்க சங்கிலி பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.