தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வி.ஜெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி செல்போனில் விக்னேஷிடம் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து கல்லூரி மாணவியும், அவரது தாயும் வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் அருகே நின்று கொண்டிருந்தனர். அங்கு சென்ற விக்னேஷிடம் இனிமேல் தனது மகளிடம் பேச வேண்டாம் என மாணவியின் தாய் கூறியதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த விக்னேஷ் மாணவியையும், அவரது தாயையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் மாணவியை தாக்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விக்னேஷை தடுத்து நிறுத்தி காயமடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.