கோயம்புத்தூர் மாவட்டத்தில் பட்டதாரியான ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைனில் விளம்பரம் வந்தது. இதனை பார்த்த ரஞ்சித் குமார் பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதற்கு 6 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து பாலமுருகன் போலியான ஆர்டரை தயாரித்து ரஞ்சித் குமாருக்கு அனுப்பியுள்ளார்.

இதனை நம்பி ரஞ்சித் குமார் அவர் கேட்ட 6 லட்ச ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். அதன்பிறகு போலியான ஆர்டர் என்பதை அறிந்த ரஞ்சித் குமார் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பாலமுருகன் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் பாலமுருகனை கைது செய்து அவரிடம் இருந்த பல செல்போன்கள், 21 கார்டுகள், விசிட்டிங் கார்டுகள், ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.