
சென்னை மாவட்டத்தில் உள்ள பாலவேடு ஆஞ்சநேயர் கோவில் தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அபிநயா(15) என்ற மகளும், கோபி(17) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் கோபி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது கோபி தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார். நேற்று காலை குணசேகரன் தனது மனைவி மற்றும் மகளுடன் மாதவரத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் பாட்டி முருகம்மாளுடன் கோபி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கோபி குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது சுவரில் இருந்த மின்சார வயரில் எதிர்பாராதவிதமாக கை வைத்த போது மின்சாரம் தாக்கி கோபி தூக்கி வீசப்பட்டார். நீண்ட நேரமாகியும் கோபி வராததால் முருகம்மாள் அங்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது தனது பேரன் தலையில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கோபியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் கோபி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.