
சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் அம்பேத்கர் தெருவில் மகாதேவ பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோகா என்ற பெயரில் மளிகை பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிரசாத் தனது நிறுவனத்தில் ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் மளிகை பொருட்கள் மொத்தமாக அனுப்பி வைக்கப்படும். அதனை எடைக்கு ஏற்ப பிரித்து பேக்கிங் செய்து கொடுத்தால் மாதம் 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் கமிஷன் தொகை வழங்கப்படும். முதலீடு செய்த பணம் ஒரு வருடத்திற்குள் திரும்ப வழங்கப்படும்.
இதனையடுத்து சிறு தொழில் வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் என விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ காலனி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். அவர்களுக்கு ஒரு சில மாதங்கள் மட்டுமே கமிஷன் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரசாத் நிறுவனத்தை மூடி விட்டு குடும்பத்தினருடன் தலைமறைவானார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் பணம் முதலீடு செய்த 60-க்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த சனிக்கிழமை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பணத்தை திரும்ப பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் நேற்று தலைமறைவாக இருந்த பிரசாத், அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.