சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ஏகவல்லி அம்மன் கோவில் தெருவில் துரை(51) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி(48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 11 ஆண்டுகளாக துரை வேலைக்கு சொல்லாமல் இருந்துள்ளார். இதனால் இந்திராணி பேக்கரி கடையில் வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார்.

இந்நிலையில் அதே தெருவில் வசிக்கும் சகோதரியான கஸ்தூரியின் வீட்டிற்கு சென்று இந்திராணி தனது குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து கூறி வந்துள்ளார். இதனை அறிந்த துரை தனது மனைவியை கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று காலை நேற்று காலை இந்திராணி தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று தலைக்கு “டை” அடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.

அப்போது கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த துரை உலக்கையால் தனது மனைவியின் தலையிலும், வாயிலும் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே இந்திராணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். கஸ்தூரியும் அங்கு சென்றுள்ளார். அப்போது துரை இனிமேல் இந்திராணி உங்கள் வீட்டிற்கு வர மாட்டார் என கூறிவிட்டு சென்றார்.

இதனால் சந்தேகமடைந்த கஸ்தூரி வீட்டிற்குள் சென்று பார்த்த போது இந்திராணி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதனையடுத்து துரை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் போலீசார் இந்திராணியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.