
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன்சத்திரம் சாந்தாங்காடு பகுதியில் புதிதாக கட்டப்படும் வீட்டிற்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரான முத்துகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
இவருக்கு சித்ரா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தனக்கு சொந்தமான பனியன் நிறுவனத்தை மூடிவிட்டு முத்துகிருஷ்ணன் திருப்பூரில் இருக்கும் மற்றொரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கடன் பிரச்சனையாலும் அவதிப்பட்ட முத்துகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் ஈரோட்டுக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.