சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு திலகர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஹரிஹரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதனையடுத்து ஹரிஹரனை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீஸ்காரர் வீரபத்திரன் ஆகியோர் ஹரிஹரனை ஆட்டோவில் அழைத்து சென்றனர். இந்நிலையில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே சென்ற போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆட்டோவில் இருந்து இறங்கி போக்குவரத்தை சரி செய்ய முயன்றார்.
அப்போது ஹரிஹரன் போலீசார் பிடியிலிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஹரிஹரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தார். இந்நிலையில் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி வேலையின் போது அஜாக்கிரதையாக இருந்து கைதியை தப்ப விட்டதாக கூறி சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீஸ்காரர் வீரபத்திரன் ஆகிய இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.