
உத்திரபிரதேச மாநிலம் கோட் கார்வி பகுதியில் மசூதி ஒன்று அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் வழிபட்டு வரும் இந்த மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த வருடம் நவம்பர் 24ஆம் தேதி தொல்லியல் ஆய்வு நடத்த அதிகாரிகள் மசூதிக்கு வந்தனர். அவர்களுக்கு உதவியாக காவல் துறையினர் உடனிருந்து பாதுகாப்பு கொடுத்தனர்.
அப்போது அதிகாரிகள் தொல்லியல் ஆய்வு நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் வாழ்ந்து வரும் இஸ்லாமியர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கலவரம் உருவானது. சில மணி நேரங்களில் கலவரம் பெரிதான நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில் 4 இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்த நிலையில் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மசூதி அமைந்துள்ள பகுதியில் வன்முறை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மசூதிக்கு அருகே காவல் நிலையம் கட்டினர்.
தற்போது புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையத்தை அப்பகுதியில் வசித்து வரும் எட்டு வயது சிறுமியான கன்கன்கஷ்யப் என்பவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் மாவட்ட எஸ்பி உள்பட பல நபர்கள் கலந்து கொண்டு திருப்பி விழாவை சிறப்புடன் நடத்தி வைத்தனர்.