
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய், திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என்றார். மத அடிப்படையில் பிளவுபடுத்தும் அரசியலை விரும்பவில்லை என்று கூறினார். இதன் மூலம் அவர் தேசிய கட்சியான பாஜக-க்கு, எதிரான கட்சி என்று வெளிப்படையாக விளக்கி விட்டார். இரண்டாவதாக அரசியலின் எதிரி திமுக தான் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். திராவிட அரசு என்ற பெயரில் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் என்று நேரடியாக சாட்டினார்.
மாநாட்டின் இறுதியில் தனி மெஜாரிட்டி பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் தம்முடன் வருபவர்களை அரவணைக்க வேண்டும் அல்லவா என தெரிவித்து, எங்களுடன் வந்தால் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு உண்டு என்றும் கூறினார். திமுக மற்றும் அதிமுக தங்களது கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுக்காத நிலையில், தற்போது மற்ற சிறு கட்சிகளை குறி வைத்து இவ்வாறு பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஊழலை எதிர்த்து போராடுவோம் என்றும் கூறினார். அதிமுகவை அவர் ஏன் இழுக்கவில்லை என்று அரசியல் விமர்சகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கட்சி பலமுறை ஆண்ட கட்சி என்பதால் அது ஒரு புதிய கட்சியின் கீழ் செல்லாது எனவே, அதிமுகவுடன் இசையுடன் செல்ல வாய்ப்பே இல்லை என்பதால், அவர் திமுகவை மட்டுமே குறிவைத்து பேசி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.