தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்ன என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கீழமை நீதிமன்றங்களை அணுக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு சற்று ஆதரவாக அமைந்துள்ளதால் அதிமுகவுக்காக அவர்கள் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் கதவை தட்ட இருக்கிறார்கள்.

ஆனால் ஓபிஎஸ் தரப்பில் இருந்தும் பல்வேறு நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியின் அணியில் இணைந்து வருவதால் ஓபிஎஸ் தன் கட்சியில் இருப்பவர்களை கட்டுக்குள் வைக்க தவறிவிட்டார் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து. இந்நிலையில் பாஜகவின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் எப்படியும் தங்கள் ஆதாயத்தையே விரும்பும் பாஜக எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் ஆதரவு கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

பாஜக ஒன்றுபட்ட அதிமுகவை விரும்பிய நிலையில் அதற்காக எவ்வளவோ முயற்சிகளை செய்தது. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி பிடி கொடுக்கவில்லை. தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அவருக்கு சாதகமாக உள்ளதால் எப்படியும் நிரந்தர பொது செயலாளராக  மாறிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்‌. வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜக ஓ. பன்னீர்செல்வத்தை முற்றிலும் கைகழுவி விட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.