நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி, அதற்கான முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். அதன்பின், கட்சி அலுவலகம் பனையூரில் திறக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தில் வைத்து கட்சியின் கொடி மற்றும் கட்சியின் பாடல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு தந்தை பெரியார் பிறந்த நாளில், சென்னையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அதிகாலையிலேயே சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அது தொடர்பான வீடியோவை வெளியிட்டார். அதன் பிறகு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளுக்கு மரியாதை செலுத்துதல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குதல் போன்ற அனைத்தையும் அவர் அலுவலகத்திலேயே செய்தார். இது கட்சி வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறியது.

கட்சி தொடங்கிய பிறகும் கூட அவர் மக்களை நேரில் சந்திக்கவில்லை என்று விமர்சனம் வந்த நிலையிலும் கூட அவர் இன்று தந்தை பெரியார் நினைவு நாளில் அலுவலகத்தில் வைத்து தான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி அலுவலகத்திலேயே வைத்து அரசியல் செய்யும் விஜய்யை, அரசியல் விமர்சகர்கள் அவர் Work From Home மோடில் இருக்கிறார் என்று விமர்சித்துள்ளனர். நிவாரண நிதி வழங்குவதில் தொடங்கி, தமிழகத்தின் மூத்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு கூட களத்திற்கு வராத விஜய், என்ன அரசியலை நடத்துகிறார் என்பது தெளிவற்ற நிலையில் உள்ளது. மேலும் களத்திற்கு வராமல் அரசியல் செய்யும் விஜய்யின் போக்கு தேர்தல் களத்தில் அவர் எதிர்பார்க்கும் வெற்றியை அவருக்கு கொடுக்காது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்.