
இந்தியில் ஒளிபரப்பாகும் ‘கிரைம் பேட்ரோல்’ என்ற சீரியலில் நடிகை சப்னா சிங் என்பவர் நடித்துள்ளார். இவர் இதன் மூலம் மக்களுக்கு பரிச்சயமானார். இவருக்கு சாகர் கங்வார் (14) என்று மகன் இருந்துள்ளார். இவர் உத்திரபிரதேசம் பரேலியில் உள்ள தனது தாய் மாமா ஓம் பிரகாஷ்வுடன் தங்கிருந்து, 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதி அவர் காணாமல் போய் உள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இசத்நகர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் அவரது உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அந்த அறிக்கையில் அவர் அளவுக்கு அதிகமான போதை பொருள் உட்கொண்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகை சப்னா மற்றும் அவரது உறவினர்கள் காவல் நிலையத்தின் முன் போராட்டம் நடத்தினர். அதன்பின் காவல்துறையினரின் வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை நிறுத்தினர். இந்நிலையில் இன்று சாகரின் நண்பர்களான அனுஜ் மற்றும் சன்னி என 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் 3 பேரும் போதைப்பொருள் மற்றும் மது அருந்தியதாக தெரியவந்தது. அதோடு அளவுக்கு அதிகமாக சாகர் போதைப்பொருள் அருந்தியதால் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே பயந்து போன அவரது நண்பர்கள், அவரை இழுத்துச் சென்று வயல்வெளியில் போட்டுவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.