தமிழ் புத்தாண்டு நாளை (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் டெல்லியில் உள்ள தன்னுடைய இல்லத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, சில முக்கிய மத்திய அமைச்சர்கள் ஆகியோருக்கு விருந்து கொடுக்கிறார். இந்த விருந்து விழாவின்போது தமிழ் முறைப்படி பிரதமர் மோடி மற்றும் ஜேபி நட்டா ஆகியோரை வரவேற்பதற்கும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு நாட்டுப்புற கலைஞர்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் எ.ல் முருகன் திடீரென தன்னுடைய வீட்டில் பாஜக முக்கிய புள்ளிகளுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து தமிழகத்தில் அண்ணாமலையை காணவில்லை என்ற பேச்சு அடிபடும் நிலையில் டெல்லியில் நடக்கும் விருந்தில் அவரும் கலந்து கொள்கிறார் என்ற தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.