
அமலாக்கத்துறையை பயன்படுத்தி தொழிலதிபர்களை மிரட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பணம் வசூலித்ததாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஜே.பி. நட்டா உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. 50 வயதான ஆதர்ஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இவர்களின் தூண்டுதலின் பேரில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இதனால், ஆதர்ஷ் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம், வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதன்படி, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, முன்னாள் தலைவர் நளின்குமார் கட்டீல் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது பணமோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகின.
பாஜக தலைவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, காங்கிரஸ் கட்சி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதனால், இந்த விவகாரம் அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் வசூலித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எம். நாகபிரசன்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டுக் கொண்டார். அதன்பின், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதி, புகார்தாரருக்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லையென்றும், முறைகேடு இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதனை தெரிவிக்கலாம் என்றும், அதன்பின்னர் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார். அடுத்த கட்ட விசாரணை 22ஆம் தேதி நடைபெறும் என நீதிபதி அறிவித்தார்.