திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அடைய கருங்குளம் தெற்கு தெருவில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கனகராஜ் சலூன் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு தர்ஷன்(8), இலக்கியா(7) என்ற பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கனகராஜ் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். நேற்று இரவு 7 மணிக்கு கனகராஜ் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகராஜ் உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கனகராஜ் உட்பட நான்கு பேரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது. குடும்பப் பிரச்சனை காரணமாக கனகராஜ் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.