
கோவை மாவட்டம் சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாலிபர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் பைக் ரேஸில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினரும், நெடுஞ்சாலை ரோந்து படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர்களை பிடித்தனர்.
அதன் பின் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த சஞ்சய், டிக்சன் மற்றும் தமிழ் நாதன் என்பது தெரிய வந்தது. இவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தனர். இதையடுத்து 3 பேர் முகவரியையும் காவல்துறையினர் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு அபராதம் விதித்து அறிவுரை கூறிய அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த இளைஞர்கள் காவல் நிலையத்திற்கு வந்ததையும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், இதனை பார்த்த காவல்துறையினர் மீண்டும் இளைஞர்களை அழைத்து விசாரித்துள்ளார். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரின் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து வாலிபர்களின் பெற்றோர்கள் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததால் 3 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் வாலிபர்கள் தாங்கள் செய்தது தவறு என்று வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் இருசக்கர வாகனங்களை வேகமாக இயக்கியதும், போலீஸ் வளாகத்தில் ரீல்ஸ் பதிவிட்டு அதை பகிர்ந்ததும் தவறு என்பதை உணர்ந்துள்ளோம். யாரும் எங்களை பார்த்து செய்ய வேண்டாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.