
இளைஞர்கள் பலரும் செல்போன்களில் வித்தியாசமான இடங்களுக்குச் சென்று வித்தியாசமாக ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதில் சிலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரை பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் பாபு. இவருக்கு ஆல்வின் (20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் UAE வேலை பார்த்து வருகிறார். சென்ற வாரம் ஆல்வின் விடுமுறையை கலைப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெளியே செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி கோழிக்கோடு கடற்கரைக்கு சென்று தாங்கள் கொண்டு வந்த கார் மூலம் ரீல்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளனர். ஆல்வின் தனது நண்பர்கள் வேகமாக ஓட்டி வரும் கார்களை வீடியோவாக பதிவு செய்ய ரோட்டோரம் வீடியோ எடுத்தபடி நின்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அவரது நண்பர் ஓட்டி வந்த கார் ஆல்வின் மீது வேகமாக மோதியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆல்வின் நண்பர்கள் அவரை அங்கிருந்து மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ஆல்வின் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் ஆல்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்து குறித்து ஆல்வினின் நண்பர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆல்வின் இறப்பு அவரது குடும்பத்தினரை மிகவும் பாதித்துள்ளது. ரீல்ஸ் எடுக்க சென்ற இளைஞர் விபத்துக்குள்ளானது அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.