
சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி பகுதியில் திரௌபதி அம்மன் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் ஒரு திமுக உறுப்பினர் ஆவார். இவருக்கு டெல்லி பாபு (19) என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு வந்துள்ளார். இந்த நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் சோமங்கலம், எருமையூர் பகுதியில் தனது நண்பரின் பைக்கை வாங்கி கொண்டு ரீல்ஸ் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு பைக்கை வேகமாக ஓட்டி போட்டோ ஷூட் மற்றும் ரீல்ஸ் எடுத்துள்ளார்.
அப்போது எதிரே வந்த பைக் மீது நிலைத்தடுமாறி டெல்லி பாபு இடித்துள்ளார். இந்த விபத்தில் தூக்கி எறியப்பட்ட டெல்லி பாபு அங்குள்ள மின்கம்பத்தில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று டெல்லி பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரில்ஸ் மோகத்தால் இளைஞர் விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.