
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவுக்கும் பீகார் ஷெரீப்பிற்கும் இடையில் இயக்கப்படும் உள்ளூர் டான்பூர்-ராஜ்கிர் பயணிகள் ரயிலில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பயணிகளை தாக்கி, அவர்களிடமிருந்த சூட்கேஸ்களை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் வேனா மற்றும் ரஹுய் நிலையங்களுக்கு இடையில் இரவு நேரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. ரயிலில் ஏறிய மூன்று மர்ம நபர்கள், பயணிகளை தாக்கி, அவர்களது உடைமைகளைக் கொள்ளையடித்தனர். அந்த ரயில் ரஹுய் ஹால்ட்டை அடைந்ததும் குற்றவாளிகள் இரு சூட்கேஸ்களுடன் ரயிலில் இருந்து இறங்கி தப்பியோடியுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரோஹித் குமார், ரிங்கு தேவி மற்றும் அன்ஷு குமார் ஆகிய 3 பயணிகள் பலத்த காயமடைந்தனர். உடனடியாக இது குறித்து அறிந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மாடல் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைகாக அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ரோஹித் குமார் தெரிவித்ததாவது, குஜராத்திலிருந்து பாட்னாவிற்கு வந்த பின்னர், பீகார் ஷெரீப்பிற்கு உள்ளூர் ரயிலில் பயணம் செய்தபோது சில மர்ம நபர்கள் வேனாவில் ரயிலில் ஏறி தகராறில் ஈடுபட தொடங்கினர் என்றும், பின்னர் பயணிகளை தாக்கி, அவர்களின் சாமான்களை பிடுங்கிச் சென்றனர் என்றும் கூறினார்.
ரயில்வே காவல் நிலைய அதிகாரி இதுகுறித்து தெரிவித்ததாவது, தொடக்க விசாரணையில் பயணிகளிடையே இருக்கை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளதாகவும், தற்போதைய நிலையில் அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், பாட்னாவில் இருந்து புறப்படும் போது ரயில்கள் நிரம்பியிருப்பதும், பீகார் ஷெரீப்பை அடையும் நேரத்தில் வெறிச்சோடியிருப்பதும், இத்தகைய குற்றச்செயல்களுக்குத் தூண்டுதலாக உள்ளதாகவும் கூறினார். தற்போது, குற்றவாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என கூறினார்.