
டெல்லி நஜஃப்கரில் ரூ.1 கோடி மதிப்பிலான காப்பீட்டு தொகையை பெறத் திட்டமிட்டு, தந்தை-மகன் இருவரும் போலியான மரணத்தை உருவாக்கிய காப்பீட்டு மோசடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்ச்சியில், வழக்கறிஞர் ஒருவரும் அவர்களுக்கு உதவியாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தந்தை, தனது மகன் ககனுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.1 கோடி மதிப்பிலான காப்பீட்டு பாலிசி எடுத்து வைத்திருந்தார். மார்ச் 5 ஆம் தேதி ககன் சாலை விபத்தில் சிக்கியதாகக் கூறி, சிறிய மருத்துவமனையில் சிறு காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளார். பின் பெரிய மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்பட்டது.
ஆனால் அங்கு அவர் செல்லவே இல்லையென்றும் தெரியவந்தது. பின்னர், தந்தை தனது மகன் இறந்துவிட்டதாகக் கூறி இறுதிச்சடங்குகள் நடத்தியுள்ளார். மாறாக, மார்ச் 11ஆம் தேதி, ஒரு நபர் நஜஃப்கர் காவல்நிலையத்தில் வந்து, மார்ச் 5ஆம் தேதி நடந்த விபத்தில் ஒருவர் இறந்ததாக தெரிவித்தார்.
இதனால் போலீசார் விசாரணை தொடங்க, அந்த தேதியில் எந்த மரணமும், மருத்துவமனை பதிவுகளும் இல்லை என்பதை கண்டுபிடித்தனர். மேலும் விசாரணையில், ககனுக்காக சமீபத்தில் எடுத்த காப்பீட்டு பாலிசி மற்றும் மரணத்தின் சந்தேகத்தன்மை குறித்து போலீசார் ஆழமாக விசாரித்தபோது, தந்தை-மகன் இருவரும் வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில் முழு சூழ்ச்சியையும் ஒப்புக்கொண்டனர். தற்போது இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.