
சென்னையில் மின் கட்டண நிலுவை செலுத்த முடியாமல் மனஉளைச்சலில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனாம்பேட்டை நல்லான் தெருவை சேர்ந்த விஜயகுமார் (43) என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் இரண்டு மாடி கொண்ட சொந்த வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை தனது வீட்டின் மின் கட்டணத்தை செலுத்தாமல் இருந்ததால், மின்வாரியத்திடம் ரூ.2.10 லட்சம் நிலுவையாக இருந்தது. இதனை தொடர்ந்து, மின்வாரிய அதிகாரிகள் வீட்டிற்கான மின் கட்டணத்தைக் கட்ட நோட்டீஸ் அனுப்பியதுடன், பலமுறை அவரை தொடர்புகொண்டு கட்டணம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மின் கட்டணத்தை செலுத்த விஜயகுமார் தனது நண்பர்களிடம் கடன் கேட்டு முயற்சி செய்தார். ஆனால், எந்த வழியிலும் பணம் கிடைக்காததால், கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான அவர், கடந்த இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விஜயகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத்தினர் மற்றும் அருகில் உள்ளவர்கள் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.