
சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடியில் எம்.ஜி.ஆர் நகர் 9ஆவது தெருவில் வசித்து வருபவர் கிரி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு அஜித்குமார் (18) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கிரியும், அவரது மனைவியும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் மனைவியுடன், கிரியின் மகளும் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சம்பவ நாளன்று கிரி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அவரது மகன் அஜித்குமார் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த கொடுங்கையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஜித்குமாரின் உடலை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதன்பின் அப்பகுதியில் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் அஜித் குமாரின் பாட்டி சில நாட்களுக்கு முன்பு இறந்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே பந்தல் போடப்பட்டுள்ளது இதற்காக மணலியை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவருக்கு ரூபாய் 8000 பணத்தை கொடுக்க வேண்டி இருந்தது. இதனை அஜித்குமார் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளார். பணத்தை ஜனார்த்தனன் மற்றும் அவரது நண்பர் பார்த்திபனும் அஜித்திடம் கேட்டுள்ளனர்.
வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்து வருவதாக கூறி சென்ற அஜித் வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். வெகு நேரம் ஆகியும் பணம் எடுத்து வராததால் ஜனார்த்தனன் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் அஜித்தின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். வீட்டில் அஜித் உறங்கிக் கொண்டிருந்ததை பார்த்து கோபமடைந்த இருவரும் அஜித்தின் கழுத்தில் கயிறு ஒன்றை போட்டு இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி அருகே உள்ள ஒரு பாழடைந்த பழைய வீட்டில் இருவரும் தலைமுறைவாக இருந்துள்ளனர். மேலும் தாங்கள் தான் கொலை செய்ததாகவும் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். வடசென்னை பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.