உலக அளவில் செல்போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக ஆப்பிள் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ஐபோன் 16 சீரிஸ் செல்போன் கடந்த 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.9 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும் நிலையில், iphone pro மாடல்கள் பிளாக் டைட்டானியம், ஒயிட் டைட்டானியம், நேச்சுரல் டைட்டானியம், புதிய டெசர்ட் டைட்டானியம் ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கிறது. அதன் பிறகு ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் மாடலில் 48 எம்பி பியூஷன் கேமரா, டால்பி விஷனின் 4k வீடியோ பதிவு செய்யும் அம்சம் போன்றவைகள் உள்ளது.

இதில் இந்தியாவில்  ஐபோன் 16 ப்ரோ மாடல் விலை 1,19,000 ரூபாயாக இருக்கிறது. இதேபோன்று ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் 1,44,900 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து ஐபோன் 16 மாடல் விலை ரூ.79,990 ஆகவும், ஐபோன் 16 ப்ளஸ் மாடல் விலை ரூ‌.89,990 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல்களின் முன்பதிவு கடந்த 13ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இந்தியாவில் இன்று ஐபோன் 16 சீரிஸ் ஃபோன்கள் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில் நேற்று இரவு முதலே ஐபோன் ஸ்டோர்களில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ஆப்பிள் மையங்களில் ஐபோன்களை வாங்க ஆர்வமாக இரவு முதலே கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் நேற்று இரவு முதலில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கிறார்கள்.