
தமிழகத்தில் ரேஷன் கடைகளுடன் இணைந்து வங்கி சேவைகளையும் வழங்கும் விதமாக ஒரு புதிய திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது. அதாவது அரசு வழங்கும் ஓய்வூதியங்கள் மற்றும் பொங்கல் பரிசு தொகை போன்றவைகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை டெபிட் கார்டு பயன்படுத்தி ஏடிஎம் மூலம் பயனாளர்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மலை கிராமங்களில் ஏடிஎம் கிடையாது.
இதன் காரணமாக ஓய்வூதியங்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள், பொங்கல் பரிசு தொகை போன்றவற்றை எடுக்க நேரடியாக அவர்கள் வங்கிகளுக்கே செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகை நேரடியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஏடிஎம் சென்டர்களை எளிதில் அணுக முடியாத மக்களுக்காக தற்போது ரேஷன் கடைகளை மைக்ரோ ஏடிஎம்களாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 4500 மையங்களில் 3500 மையங்கள் மைக்ரோ ஏடிஎம் களாக மாற்றப்பட்டுள்ளது என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் கூறியுள்ளார். இதனையடுத்து ரேஷன் கடைகள் மைக்ரோ ஏடிஎம்களாக மாறும்போது ஆயிரம் ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் 34 லட்சம் பேர் முதியோர் ஓய்வுத் தொகையை பெற்று வரும் நிலையில் அவர்களில் 2.7 லட்சம் பேர் நேரடியாக வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் செல்கிறார்கள். ஆனால் தற்போது ரேஷன் கடைகளில் மைக்ரோ ஏடிஎம் வந்தால் அவர்கள் எளிதாக உதவி தொகையை அங்கேயே பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது கிராமப்புற மக்களுக்கு பெரிதாக உதவும் என்று கூறப்படுகிறது.