
செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, காவேரி விவகாரத்தில் இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள், ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள், தமிழ்நாட்டிற்கும் – மக்களுக்கும் என்ன செய்தார்கள் ? என்ற முதல் கேள்வி தான் எனக்கு தோன்றுகிறது. இதை வெறும் அரசியலாக்கி கொண்டிருக்கிறார்களே ஒழிய… இதற்கான நிரந்தர தீர்வை இதுவரை யாரும் எடுத்தார்களா ? வருடம்தோறும் செப்டம்பர், அக்டோபர் வரும்போது காவிரி பிரச்சனை.
மழைக்காலம் முடிஞ்ச உடனே, இதை மறந்துவிட வேண்டியது. கோடை காலம் வந்தால் ? தண்ணீர் பிரச்சினை. இது எத்தனை ஆண்டு காலம் தொடர் கதையாக தான் இருக்கிறதே ஒழிய, இதற்கு நிரந்தர தீர்வு என்ன ? இன்னைக்கு உண்ணாவிரதம் இங்கே ஆரம்பித்திருக்கிறோம். நேற்று பெங்களூர் சிட்டி ஃபுல்லா பந்த் நடத்துறாங்க.
ஏற்கனவே மாண்டியாவில் பந்த். கர்நாடகா – தமிழ்நாடு எல்லையிலே அத்தனை பஸ்களை நிறுத்தி, தமிழர்களை இறங்கி நடந்து போக சொல்றாங்க. இதையெல்லாம் தவறான ஒரு முன் உதாரணமாக தான் போய்க்கொண்டிருக்கிறதே ஒழிய, இதற்காக தீர்வு என்ன என்பது முதல் கேள்வி. எத்தனை பிரதமர்கள் ?
எத்தனை கவர்னர்கள் ? எத்தனை பிரசிடெண்ட் ? எத்தனை முதல்வர்கள் ? எல்லாம் வந்தும் இந்த 50 ஆண்டு காலத்தில் விவசாயிகளுக்கு என்ன தீர்வு ? இங்கே ஆட்சிகள் தான் மாறிக் கொள்கிறதே ஒழிய, எந்த காட்சிகளும் மாறவில்லை.அப்படியே தான் இருக்கு. விவசாயிகள் வாழ்ந்தால் தான் நாடு வாழ்ந்ததாயிருக்கும் தமிழகத்தை பொறுத்தவரையில் விவசாயம் சார்ந்த பூமி இது.
இன்னைக்கு தஞ்சையில் ராஜராஜ சோழன் ஆண்ட இந்த பூமி நெற்களஞ்சியமாக இருந்த பூமி… எத்தனையோ இலட்சக்கணக்கான ஏக்கர்ல பயிர் செய்த பூமியில், இன்றைக்கு தண்ணீர் இல்லாமல்…. டெல்டா பகுதி முழுக்க பாலைவனமாக மாறி இருக்கிறது என்றால் ? உண்மையிலேயே நாம் அனைவரும் தமிழர்களாக தலை குனிந்து, வெட்கப்பட வேண்டிய ஒன்று நிலை என தெரிவித்தார்.