மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் குற்றச்சாட்டுகளால் பல முன்னணி நடிகர்கள் கூட சிக்கி வருகிறார்கள். குறிப்பாக நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்த துயரங்கள் குறித்து வெளிப்படையாக கூறி வருகிறார்கள். அதோடு மலையாள சினிமாவைப் போன்று பிற ‌ மொழி சினிமாக்களிலும் ஹேமா கமிட்டி போன்று ஒரு குழு அமைத்து பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மலையாளத் திரையுலகை புரட்டி போட்ட பாலியல் அத்துமீறல் புகார்கள் குறித்து  தற்போது காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்திய ஆண்களிடம் ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது. பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது மிகவும் வேதனையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பெண்கள் மீதான குற்றச்சாட்டுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இந்திய ஆண்களிடம் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று தான் அர்த்தம்‌ தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் நிர்பையா ‌ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது முதல் கொல்கத்தாவில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய கொலை செய்யப்பட்டது வரை தன் பேட்டியில் விவரித்து பேசியுள்ளார். மேலும் பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரிப்பதற்கு இந்திய ஆண்களிடம் பிரச்சனை இருப்பதாக ஒட்டுமொத்த ஆண்களையும் சேர்த்து அவர் பேசியது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.