
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மேடை கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய சிவாஜி கணேசன் நடிப்பு திறமையால் சினிமாவிற்கு வந்து உச்சகட்ட புகழை அடைந்தார். கடவுள் சிவன் முதல் சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மன் வரை அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று சிறப்பாக நடித்தவர் சிவாஜி கணேசன்.
சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் அக்டோபர் மாதம் 1- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி படம் அன்றைய காலகட்டத்தில் 175 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. கடந்த 1953-ஆம் ஆண்டு வெளியான திரும்பிப் பார் என்ற திரைப்படத்தை டி.ஆர் சுந்தரம் இயக்கியும் தயாரித்தும் இருந்தார்.
இந்த படத்திற்கு முன்னால் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் வசனம் எழுதியிருந்தார். சிவாஜி கணேசன் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்த இந்த படமும் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சிவாஜி கணேசன் நடித்த தெனாலிராமன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1958-ஆம் ஆண்டு வெளியான உத்தமபுத்திரன் வரலாற்று திரைப்படத்தை ஸ்ரீ பிரகாஷ் ராவ் இயக்கினார்.
இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசனும் பத்மினியும் இணைந்து நடித்தனர். சுமார் 100 நாட்களைக் கடந்து திரையரங்கில் இந்த படம் வெற்றிகரமாக ஓடியது. முக்கியமாக சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் சுமார் 25 வாரங்களுக்கும் மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வெள்ளி விழா படமாக மாறியது. அடுத்ததாக 1960-ஆம் ஆண்டு வெளியான இரும்புத்திரை படம் 125 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடியது.
அதே ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான தெய்வ பிறவி படம் அகில இந்திய சான்றிதழை பெற்றது. மேலும் எட்டாவது தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. இந்த படம் ஹிந்தி, சிங்களம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு 100 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி வெற்றி படமாக மாறியது. அண்ணன் தங்கையின் பாசத்தை அழகாக எடுத்துக் கூறிய பாசமலர் படம் 26 வாரங்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.