
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது தெரியவந்தது. இரவு நேரம் என்பதால் சிறுத்தை உணவை தேடி ஊருக்குள் வந்த நிலையில் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது. அப்போது காவல் நிலையத்தில் உள்ள அறையில் போலீஸ் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார்.
சிறுத்தை அறையில் நுழைவதை கண்ட அவர் அதிர்ச்சியில் சத்தம் போட முடியாமல் அமைதியாக இருந்தார். இந்நிலையில் உள்ளே வந்து சிறுத்தை அங்கு உணவு எதுவும் தென்படாததால் திரும்பி சென்றது. சிறுத்தை வெளியே சென்றதை உறுதி செய்த போலீஸ் உடனடியாக நுழைவு வாயில் கதவை மெதுவாக பூட்டினார்.
இதைத்தொடர்ந்து இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்த நிலையில் சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் சிறுத்தை காவல் நிலையத்திற்குள் நுழைந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான நிலையில் அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.