
ஐக்கிய மாநிலங்களில் ஒன்றாக மிக்சிகன் விளங்குகின்றது. இப்பகுதியில் 2 பெண் குழந்தைகளுடன் ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொதுவாக மேற்கத்திய நாடுகளில் தாய், தந்தையினர் வெளியே செல்லும்போது குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக பணியாளர் ஒருவரை நியமித்து விட்டு செல்வது வழக்கம். அதேபோன்று அங்கும் பணியாளர் ஒருவரை நியமித்துவிட்டு அவர்களின் 13 மற்றும் 7 வயதான 2 பெண் குழந்தைகளை தனியே விட்டுவிட்டு தாய், தந்தையினர் வெளியே சென்றுள்ளனர்.
அப்போது இரவு நேரத்தில் இரு சிறுமிகளுக்கு இடையே மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதாவது 7 வயதுடைய சிறுமி கழிவறையை சரியாக சுத்தம் செய்யாத காரணத்தினால் அவரின் 13 வயது சகோதரி மிகவும் கோபத்துடன் விவாதம் செய்துள்ளார். இந்த விவாதம் உச்சத்திற்கு செல்லவே 13 வயது சிறுமி தனது 7 வயது தங்கையை அருகிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து 10 முறை குத்தியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தைகளை கவனித்துக் கொள்ள வந்த நபர் காவல் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கையை கொலை செய்த குற்றத்திற்காக 13 வயது சிறுமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.