
நோய்டாவில் திருமண ஊர்வலத்தின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 வயதிற்கு உட்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளத. வீட்டு பால்கனியில் குடும்பத்தினருடன் திருமண ஊர்வலத்தை மகிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த போது, சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் நோய்டாவின் செக்டர் 49 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகாபூர் கிராமத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. வீடியோவில், ஒரு சாலையில் திருமண ஊர்வலம் நடந்து செல்ல, அக்கம் பக்கத்தினர் அதை மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தது காணப்படுகிறது. மணமகன் மற்றும் அவரது சில நண்பர்கள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் இருந்தனர். ஊர்வலத்தில் இசை, நடனம் ஆகியவை கோலாகலமாக நடந்துக் கொண்டிருந்தபோது, மணமகனுடன் இருந்த அவரது நண்பர் திடீரென துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காற்றில் சுட்டார். அந்த துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா, சிறுவனின் தலையை தாக்கி ஊடுருவியதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்தவுடன் குழந்தையை பிடித்திருந்த நபர், வீடியோவில் பீதி மிகுந்த நிலையில் உள்ளே ஓடிச் செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது. குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அதன் பிறகு, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் விசாரணை தொடங்கியுள்ளதுடன், வைரலாகிய வீடியோவை ஆய்வு செய்து வருகின்றனர். காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “செக்டர் 49 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகாபூர் கிராமத்தில் நடந்த திருமண ஊர்வலத்தின்போது சல்யூட் ஷூட்டிங் காரணமாக குழந்தை சிக்கி உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றனர். உடற்கூறு பரிசோதனை முடிக்கப்பட்டு, மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டம் மற்றும் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது,” என தெரிவித்துள்ளனர்.