நர்சிங்க்பூர் மாவட்டத்தின் தேன்டுகேடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இமாலியா நோர்க்பூர் கிராமத்தில், 11 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில்  ஏழை கூலி தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த அந்த சிறுமி, தனது தாயிடம் பிஸ்கட் வாங்க ₹5 கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், குடும்பத்தின் பொருளாதார சிக்கலினால், அம்மா அந்த பணத்தை வழங்க முடியாத நிலையில், மறுத்துவிட்டார்.

இதனால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்த சிறுமி வீட்டிலேயே தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துயர சம்பவம், சிறுமியின் குடும்பத்தையும், கிராம மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் நடந்த போது, சிறுமியின் பெற்றோர் வேலைக்காக வெளியே சென்றிருந்ததால், அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அவர்கள் திரும்பி வந்தபோது, தங்கள் மகள் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு பெரும் சோகத்திற்குள்ளாகினர். இது குறித்து தகவலறிந்த தேன்டுகேடா காவல்துறையினர் விரைந்து வந்து, முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த துயர சம்பவத்தின் பின்னணி மற்றும் முழு காரணங்களை தெரிந்துகொள்ள, போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.