ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் தாமரைக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்டு வயதுடைய யாசினி என்ற மகள் உள்ளார். இந்தச் சிறுமி அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த யாசினை தனது தாயிடம் தின்பண்டம் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு சிறுமியின் தாய் ஐந்து ரூபாய் நாணயத்தை கொடுத்து கடைக்கு சென்று தின்பண்டம் வாங்கி கொள்ளுமாறு கொடுத்துள்ளார். அந்த 5 ரூபாய் நாணயத்தை வாயில் போட்டபடி சிறுமி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமி நாணயத்தை விழுங்கி விட்டார்.

இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக தனது தாயிடம் சென்று நாணயத்தை விழுங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் பதறிப்போன சிறுமியின் தாய் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தனது மகளை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் சிறுமியை வயிற்றுப் பகுதியில் நாணயம் இருந்தது. அதனை வெளியே எடுக்கும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.