கோவை குனியமுத்தூரில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம நபர்கள் நூதன முறையில் டேப் ஒட்டி, ரூ.30,000 பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தபோது பணம் டெபிட் செய்யப்பட்ட குறுஞ்செய்தி வந்தாலும், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் வங்கியிடம் புகார் அளித்தனர்.

வங்கியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தின் பணம் வெளியே வரக்கூடிய பகுதிக்கு டேப் ஒட்டிவிட்டு, பின்னர் மீண்டும் நுழைந்து பணத்தை எடுத்து சென்றனர். இந்தச் சம்பவம் மட்டும் அல்லாமல், கோவை மற்றும் அவினாசி உள்ளிட்ட 5 ஏடிஎம் மையங்களில் இதே முறையை பயன்படுத்தி கொள்ளை நடத்தப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் தனிப்படையை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்வோம் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.