கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே காவேரி விவகாரத்தை போலவே தென்பெண்ணை ஆறு விவகாரமும் நீண்ட நாள் நதிநீர் பங்கீடு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்து வந்த நிலையில் மத்திய அரசுக்கு இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டிருந்தது.

கடந்த மூன்று முறைக்கு மேல் தீர்ப்பாயம் அமைப்பதற்கு மத்திய அரசுக்கு கால அவகாசமும் வழங்கப்பட்ட நிலையில் மத்திய அரசு இன்னும் அந்த தீர்ப்பாயத்தை அமைக்காமல் இருந்தார்கள். கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது நிச்சயமாக நாங்கள் அடுத்த முறை அமைத்து விடுவோம் என்று சொல்லி இருந்தார்கள்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி ஹிருஷிகேஷ் ராய் அமர்வில் முன்பாக விசாரணைக்கு வந்த போது இன்னமும் தீர்ப்பாயம் அமைக்கப்படவில்லை என்ற விஷயத்தை மத்திய அரசு சார்பில் சொன்னவுடன் கோபம் அடைந்த நீதிபதி, கடந்த முறையை நாங்கள் உங்களுக்கு இதுதான் கடைசி கால அவகாசம் என்பதை திட்டவட்டமாக கூறியிருந்தோம். அப்படி இருந்தும் ஏன் இந்த தீர்ப்பாயத்தை அமைக்காமல் இருக்கிறீர்கள் ?

இது மிக முக்கியமான நதிநீர் பங்கீடு விவகாரம் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா ? போன்ற பல்வேறு கேள்விகளை கோபத்துடன் எழுப்பினார்கள். மத்திய அரசை பொருத்தவரை கர்நாடகாவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது.  அதன் காரணமாக புதிய அரசிடம் நாங்கள் அவர்களது நிலைப்பாட்டை கேட்டிருக்கிறோம் என்ற ஒரு தகவல் சொல்லப்பட்டது. அதற்கு மீண்டும் அதிருப்தியுடன் கேள்வி எழுப்பிய நீதிபதி,

புதிய அரசு, பழைய அரசு என்பதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை.  தீர்ப்பாயம் அமைக்க வேண்டியது உங்களது வேலை. இன்னும் ஏன் அமைக்கவில்லை என்பதற்கான பதிலை சொல்லுங்கள் என்று சொன்னார்கள்? அதற்கு பதில் அளித்த மத்திய அரசு,  இன்னும் இரண்டு மூன்று தினங்களில் கர்நாடக அரசின் நிலைப்பாட்டு எங்களுக்கு தெரியவந்து விடும். எனவே அதற்கு பிறகு நாங்கள் இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாட்டை கூறுகிறோம்.

சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார்கள். கடைசியாக ஒரே வாரம் மட்டும்தான் உங்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்குள் உங்களது நிலைப்பாட்டை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுங்கள் என்ற ஒரு உத்தரவை பிறப்பித்து வழக்கினை ஒத்தி வைத்து இருக்கிறார்கள் நீதிபதிகள்.

மத்திய அரசு பொருத்தவரை கர்நாடகா அரசு,  தமிழ்நாடு அரசு உடன் ஏற்கனவே கலந்தாலோசித்தாலும் இன்னமும் தீர்ப்பாயத்தை அமைக்காமல் இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசும் உச்ச நீதிமன்றத்தில் பலமுறை மத்திய அரசுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டாகவே இதனை முன்வைத்து வந்த நிலையிலும்,  மத்திய அரசு தீர்ப்பாயத்தை அமைக்காமல் இருப்பதற்கு நீதிபதிகள் இந்த முறையும் தங்களது கடுமையான அதிருப்தியை  வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.