
கோவை-திருப்பூர் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வேலை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் இருந்து கோவையை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தொண்டாமுத்துறை சேர்ந்த சுரேந்திரன்(32) என்பவர் ஓட்டியுள்ளார். திருப்பூர் பைபாஸ் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பலத்த காற்று வீசி உள்ளது.
இதனால் பேருந்தின் முன் கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. இதில் ஓட்டுநர் சுரேந்திரனின் தலை, கை மற்றும் கால் போன்ற பகுதிகளில் படுகாயம் அடைந்தது. இருப்பினும் அந்த காயங்களை பொறுப்படுத்தாமல் சுரேந்திரன் லாவகமாக பேருந்தை இயக்கி, சாலையோரம் நிறுத்தினார். இதனால் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.