
சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. வாய் தகராறு ஒரு கட்டத்தில் முற்றி கொலைவெறி தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேரி வருகின்றன. அது மட்டுமல்லாது ஜாதி ரீதியான தாக்குதல், போதையில் தாக்குதல், ரயில், பேருந்துகளில், ஏரியாக்களில் யார் தலைமை ஏற்பது என்பது தொடர்பான தாக்குதல், காதல் விவகாரம் என பல்வேறு காரணங்களால் மாணவர்களிடையே தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாநகரின் முக்கிய பகுதியாக விளங்கும் தெப்பக்குளம் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். இங்கு காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் இங்குள்ள பேருந்து நிலையத்தில் அரசு உதவி பெறும் பள்ளியை சார்ந்த 2 மாணவர்கள் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களும் பலர் அந்த பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஒரு கும்பலை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் தங்களது வகுப்பிலேயே பயிலும் 2 மாணவர்களை சர மாறியாக தாக்கியுள்ளனர். இதில் மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. அந்த வீடியோ காட்சியில் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மாறி மாறி தாக்கி கொள்கின்றனர். மேலும் 2 கும்பலாக சேர்ந்து 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 2 மாணவரையும் தனித்தனி குழுக்களாக தாக்குகின்றனர்.
இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவர்கள் மூக்கிலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட தங்களுடைய பேக்கை எடுத்துக்கொண்டு செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து துரத்தி துரத்தி தாக்கும் மாணவர்கள் திடீரென கற்களை எடுத்து அவர்கள் மீது வீச தொடங்கினர். இந்த சம்பவம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளி சீருடையில் எந்த விதமான ஒரு பதட்டமும் இல்லாமல் பொதுவெளியில் மாணவர்கள் கும்பலாக சேர்ந்து தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.