சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூரில் இருந்து தியாகராய நகருக்கு 88k என்ற தட  எண் கொண்ட பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து எப்போதும் போன்று குன்றத்தூருக்கு மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது செல்லம்மாள் கல்லூரி நிறுத்தத்தில் பேருந்து நின்றது.

இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறினர். இந்நிலையில் சில மாணவர்கள் மட்டும் பேருந்தின் மேல் தளத்தில் ஏறி உள்ளனர். பேருந்தின் மேல் தளத்தில் நின்று ஆடுவது, கலாட்டா செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்தின் உள்ளே இருந்த பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் ஆகியோர்களுக்கு தொந்தரவாக இருந்தது.

இது குறித்து கிண்டி காவல்துறைக்கு பயணி ஒருவர் புகார் அளித்தார். விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவர்களை கீழே இறக்கி ஆலோசனைகள் கூறி மாணவர்களை கலைத்து விட்டனர். தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் கல்லூரி மாணவர்கள் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது நடந்த ரூட்டு தல கலவரத்தில் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும், பச்சையப்பா கல்லூரி மாணவர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரிதும் பாதித்தது. இதனை அடுத்து பேருந்து மேற்கூரையில் ஏறி மாணவர்கள் கலவரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.