
அமெரிக்காவின் சுகாதாரத் துறை செயலர் ரோபர்ட் எப். கென்னடி ஜூனியர், சமீபத்தில் வெளியிட்டுள்ள கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் கூறியதாவது, “சர்க்கரை என்பது நேரடியான விஷம்” என அவர் தெரிவித்தார்.
உணவுப் பழக்கங்களில் அதிகமாக சேர்க்கப்படும் சர்க்கரையின் தாக்கத்தை பற்றி எச்சரித்த அவர், அமெரிக்கர்கள் எவ்வளவு சர்க்கரை உட்கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என கூறினார்.
அதன் சரியான அளவு பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் எனக் கடுமையாக வலியுறுத்தினார். மேலும், இதுபோன்ற உணவுப் பழக்கங்கள், பலவீனமான உடல்நலத்தை உருவாக்குவதோடு, குழந்தைகளின் வளர்ச்சிக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் என்றார்.
மேலும் செயற்கை உணவு நிறமிகள் குறித்து அமெரிக்க அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், பிளாஸ்டிக் சார்ந்த ரசாயனங்களில் இருந்து தயாரிக்கப்படும் 8 உணவு நிறமிகள் மீது 2026 முதல் முழுமையான தடை அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனுடன், “Red No. 3” எனும் புற்றுநோய் அபாயம் உள்ள உணவு நிறம், 2027 முதல் உணவுப் பொருட்களில், 2028 முதல் மருந்துகளிலிருந்து முற்றிலும் தடை செய்யப்படும்.
உணவுப் பொருட்கள் மீது சரியான தகவல்களை வெளியிடும் வகையில் லேபிள் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவை அனைத்தும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கிய நலனைக் கருத்தில் கொண்டே செய்யப்படுவதாக கென்னடி மற்றும் FDA ஆணையாளர் மார்ட்டி மகாரி தெரிவித்துள்ளனர்.