தென்மேற்கு பாகிஸ்தானில் ஈரானிய எல்லைப் பகுதியில் டாப்ஃடான் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணுவ பாதுகாப்பு படை வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பிரிவினைவாத பயங்கரவாத குழுக்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் துணை ராணுவப்படையினர் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நாஷ்கி என்ற பகுதியில் ராணுவ பேருந்துகளில் துணை ராணுவ படையினர் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பலோச் இயக்க பயங்கரவாதிகள் ஒரு காரில் வெடிபொருள்களை ஏற்றிக் கொண்டு வந்து அவர்கள் சென்று கொண்டிருந்த பேருந்துகளின் மீது மோதி வெடிக்க செய்தனர். இந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 90 வீரர்கள் வரை கொல்லப்பட்டதாக பலோஜ் விடுதலை படை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாகவும் 35 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு முன் பயங்கரவாத இயக்கம் கடந்த செவ்வாய் கிழமை 450 பயணிகளை ஏற்றி சென்ற ரயிலை கடத்தியது. அப்போது அதில் ராணுவத்தினர் பயங்கரவாதிகளை கொன்று ரயில் பயணிகளை மீட்டனர். மேலும் அடுத்தடுத்த வாரங்களில் பயங்கரவாதிகள் இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.