
ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில், நண்பர்கள் சூனியம் செய்கிறார்கள் என்ற சந்தேகத்தில், ஒருவர், இரண்டு நண்பர்கள் மற்றும் ஒரு காவலாளியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தீபக் என்பவர், தனது நண்பர்களான மோனு மற்றும் சந்தீப்பை வீட்டிற்கு அழைத்து, மூவரும் சேர்ந்து மது அருந்திய பின்னர், இருவரையும் அடித்து கொலை செய்தார்.
இதற்குப் பிறகு, அவர்களின் அந்தரங்க உறுப்புகளையும் வெட்டினார். இவற்றை முடித்த பிறகு, ஒரு பூசாரியை கொல்ல திட்டமிட்டு கோவிலுக்குச் சென்றார். ஆனால் அங்கு பூசாரி இல்லாத காரணத்தால், அங்கு இருந்த காவலர் லால் சிங்கை அடித்து கொன்று, அவரின் அந்தரங்க உறுப்புகளையும் துண்டித்தார்.
போலீசார் தீவிர விசாரணையில், தீபக், கொலைக்கு முன்பு ‘கௌஃப் சீசன் 1’ என்ற வலைத் தொடரைப் பார்த்ததாகவும், அதன்படி கொலையை திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், ஒரு நண்பரை 70 முறை அழைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர், தனது மொபைலை அணைத்துவிட்டார். இதனால் அவர் உயிர்பிழைத்தார் என்றும் தெரியவந்துள்ளது.
மோனுவின் காதல் திருமணத்திற்கு ஆதரவாக இருந்த தீபக், பின்னர் சூனியம் செய்கிறார் என சந்தேகித்து மோனுவையும், அவரை காப்பாற்ற வந்த சந்தீப்பையும் கொன்று, பிறகு காவலரையும் படுகொலை செய்தார். தற்போது தீபக் கைது செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.