உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள டிக்ரி கிராமத்தில், தனது மனைவிக்கு தவறான உறவு இருக்கிறதென்று சந்தேகித்த கணவன், மனைவி மற்றும் இரு மகள்கள் மீது ஆசிட் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் மூவரும் தீவிரமாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் 39 வயதான ராம்குனி, 23 வயதான ரச்சிதா, மற்றும் 16 வயதான நெஹா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்துள்ளது. டிக்ரி கிராமத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில், ராம்குனி தன் 2 மகள்கள், 1 மகனுடனும் வசித்து வந்த நிலையில், கணவர் ராம் கோபால் ஷாஹாபாத் ஹர்தோய் பகுதியில் தனியாக வாழ்ந்து வந்தார்.

போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகையில், “வெள்ளிக்கிழமை இரவு, ராம்குனி மற்றும் மகள்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, ராம் கோபால் சுவர் ஏறி வீட்டுக்குள் புகுந்து, மூவர் மீதும் ஆசிடை வீசியுள்ளார்,” என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

சம்பவத்தின் போது, ராம்குனியின் மகன் ஆசு தனது நண்பரிடம் தங்கி இருந்ததால் தாக்குதலிலிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆசு தன் தந்தையை எதிர்த்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆசு மேலும் தெரிவித்ததாவது, “என் அப்பா மிகுந்த மது பழக்கமுடையவர். அதனால் எங்கள் நிலங்களை விற்றுவிட்டார். இறுதியில் நாங்கள், எங்கள் அம்மாவுடன் டிக்ரி கிராமத்திற்கு வந்தோம்.”

தற்போது மூவரும் ஷாஜஹான்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ராம் கோபால் சம்பவத்துக்குப் பிறகு தப்பி ஓடியுள்ளார். அவரை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது.