கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ரன்யா ராவ். இவர் கடந்த மார்ச் 4ஆம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் துபாயிலிருந்து 14.2 கிலோ தங்கத்தை கடத்த முற்பட்டதாக கைது செய்யப்பட்டார். அதன் பின் காவல் துறையின் விசாரணையின் போது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இவர் கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இந்நிலையில் இணையதளங்களில் இவரின் புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த புகைப்படத்தில் அவர் வீங்கிய கண்களுடன், முகத்தில் காயங்களுடன் காணப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதால் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம், என்று சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அதோடு சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் வேகமாக பரவி வரும் நிலையில் நடிகை மீது சட்டத்துக்கு புறம்பாக எந்த தாக்குதலும் நடந்திருக்கக்கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் நாகலட்சுமி சௌதரி கூறும் போது, “எங்களிடம் புகார் வந்தால் மட்டுமே விசாரணை செய்ய முடியும், சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து விதிகளையும் கடைபிடிக்க வேண்டுமே தவிர எந்த ஒரு காரணத்திற்காகவும் யாரையும் தாக்க கூடாது. அதன் பிறகு நடிகர் ரன்யா ராவ் இது பற்றி அதிகாரப்பூர்வமாக புகார் கொடுத்தால் அவருக்கு தேவையான ஆதரவை நாங்கள் அளிப்போம், உரிய விசாரணை நடத்த உத்தரவிடுவோம்” என்று கூறியுள்ளார். மேலும் இவர் கர்நாடக மாநில ஐபிஎஸ் ராமச்சந்திரா ராவின் வளர்ப்பு மகள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது