
தைவான் நாட்டில் விவசாய நிலங்களை பெரிய வகை பச்சோந்திகள் அழிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து அந்நாட்டு அரசு விவசாய பாதிப்பு ஏற்படுத்தும் பச்சோந்திகளின் எண்ணிக்கையை குறைக்க புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. உள்நாட்டு விவசாயத்தை அதிக அளவில் தைவான் சார்ந்துள்ளதால் விளைச்சலை பாதிக்கும் காரணியாக இருக்கும் பெரிய வகை பச்சோந்திகளின் எண்ணிக்கை தொடர்ந்து அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. இதற்கு முடிவு கட்டும் விதமாக தைவான் அரசு 1.2 லட்சம் பச்சோந்திகளை கொல்ல முடிவெடுத்துள்ளது. தைவானின் இயற்கை பாதுகாப்பு அமைப்பு கூறியபடி, தைவான் தீவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சுமார் 2 லட்சம் பெரிய வகை பச்சோந்திகள் இருக்கின்றன.
ஏற்கனவே கடந்த ஆண்டு இவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சிறப்பு வேட்டை குழுவினர் மூலம் சுமார் 70 ஆயிரம் பெரிய வகை பச்சோந்திகள் வேட்டையாடப்பட்டன.இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அதிக அளவில் பெரிய வகை பச்சோந்திகள் தைவானில் பெருகி வருகின்றன. இவை உள்ளூர் பயிர்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதால் உள்ளூர் விவசாயிகள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். இந்த உயிரினம் அதிக அளவில் பெருகி வருவதற்கு காரணம் இயற்கையாகவே வேட்டையாடும் வேறு எந்த உயிரினமும் தைவானில் இல்லை. இவை பொதுவாக பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக இருந்தாலும் பழங்கள், இலைகள் மற்றும் செடிகளை மட்டுமே உணவாக உட்கொள்கின்றன.
பெண் பச்சோந்தி ஒரே நேரத்தில் 80 முட்டைகள் வரை இடும் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழும். தைவானின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அதிகம் இந்த வகை பச்சோந்திகள் பெருகி வருகின்றதால் இந்த ஆண்டும் 1.2 லட்சம் பச்சோந்திகளை கொல்ல அரசு முடிவு எடுத்துள்ளது. இதனைக் கொல்வதற்கு மீன்பிடி ஈட்டிகளை பயன்படுத்துவது மனிதாபித்தனமான முறை எனவும் கூறியுள்ளது. இதற்கு அரசு தரப்பில் தக்க சன்மானமும் வழங்கப்படும் எனவும் இந்த வகை பச்சோந்திகள் அதிகம் உள்ள இடங்களை கிராமப்புற மக்கள் வேட்டையாடுபவர்களுக்கு காட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.