குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கோரி மத்திய அமைச்சர் சார்பில் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்திருக்கும் ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என்று மத்திய இணை அமைச்சரான சோபா கரந்தலஜே கூறினார். அவர் இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதால் திமுகவை சேர்ந்த தியாகராஜன் என்பவர் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

அதில் இரு பிரிவினர் இடையே கலகலத்தை தூண்டுதல், பொது அமைதியை சீர்குலைத்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் சோபா கரந்தலேஜே மீது மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இதனை ரத்து செய்ய கோரி ஷோபா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஷோபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரச்சனையில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதோடு குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறிய கருத்து எந்த உள்நோக்கத்துடனும், தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கிலும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தனது கருத்து தமிழர்களை புண்படுத்தியதை புரிந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் மன்னிப்பு கூறியதாகவும் அவர்களின் வரலாறு கலாச்சாரம் மற்றும் பண்பாடு மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், தான் அவ்வாறு தெரிவித்த கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் அந்த பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அரசிடமிருந்து தகுந்த அறிவுறுத்தல்களை பெற்று தெரிவிப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். பின்னர் வழக்கு ரத்து செய்யக்கோரிய மனு மீது செப்டம்பர் 5-ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் கூறி நீதிபதி வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.