
விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்த நிலையில், மகத்தான சாதனை என பாராட்டியுள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா..
ஆசிய கோப்பை 2023 இன் சூப்பர் 4 சுற்றில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் மோதியது. நேற்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் இருவரும் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தனர்.
இந்திய அணி 100 ரன்களை கடந்த பின் ரோகித் சர்மா, கில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 49 பந்துகளில் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) 56 ரன்களும், கில் 52 பந்துகளில் (10 பவுண்டரி) 58 ரன்களும் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதன் பிறகு விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் ஜோடி சேர்ந்னர். தொடர்ந்து திடீரென மழை வந்த காரணத்தால் போட்டி நிறுத்தப்பட்டது. மேலும் மீண்டும் மழை வந்த காரணத்தால் ரிசர்வ் டேவான செப்டம்பர் 11, அதாவது இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி விட்ட இடத்திலிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்திய அணி 2 விக்கெட் இழந்து 24.1 ஓவரில் 147 ரன்கள் எடுத்திருந்தது. கோலியும் (8* ரன்கள்), ராகுலும் (17* ரன்கள்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மாலை 3 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில், மீண்டும் கொழும்பில் மழை பெய்த காரணத்தால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து, போட்டி 4:40 மணியளவில், ஓவர்கள் குறைப்பு இல்லாமல் மீண்டும் தொடங்கியது. அதன்படி தற்போது கே எல் ராகுலும், விராட் கோலியும் களமிறங்கி சிறப்பாக ஆடி சதமடித்தனர்.

இதில் கோலி தனது பரபரப்பான சதத்தின் போது பல சாதனைகளை பதிவு செய்தார். 34 வயதான நட்சத்திர பேட்டர் கோலி மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தின் ரிசர்வ் நாளில் ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன்களை எட்ட 90 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. விராட் 50 ஓவர் கிரிக்கெட்டில் தனது 47 வது சதத்தை பதிவு செய்தார், இப்போது சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்களை விட 2 சதங்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார். இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் (321 இன்னிங்ஸ்) சாதனையை 267 இன்னிங்ஸ்களில் 13,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். ஒரே மைதானத்தில் தொடர்ச்சியாக 4 இன்னிங்ஸ்களில் ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார். கொழும்பு மைதானத்தில் விராட் கோலி கடந்த 4 ஒருநாள் போட்டிகளிலும் 128*(119), 131(96), 110*(116), 122*(94) ரன்களை விளாசியுள்ளார். 3 வகையான கிரிக்கெட் பார்மெட்டிலும் மொத்தம் 77 சதமடித்துள்ளார். இதில் சச்சின் மொத்தம் 100 சதமடித்துள்ளார்.
இன்று தொடக்கத்தில் தாமதத்திற்குப் பிறகு ரிசர்வ் நாளில் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இந்திய இன்னிங்ஸைத் தொடங்கினர். இருவரும் சிறப்பான சதங்களுடன் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினர் மற்றும் மூன்றாவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 233 ரன்கள் சேர்த்தனர், இந்தியா 50 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுக்க உதவியது. ஃபஹீம் அஷ்ரஃப் வீசிய கடைசி பந்தில் ஒரு சிக்ஸர் உட்பட தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளுடன் கோலி இன்னிங்ஸை முடித்தார் . கோலி 94 பந்துகளில் (9 பவுண்டரி, 3 சிக்ஸர்) 122* ரன்கள் எடுத்தார் மற்றும் ராகுல் 106 பந்துகளில் (12 பவுண்டரி, 2 சிக்ஸர்) 111* ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் இன்று தனது நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுப்பை காயத்தால் இழந்தது, மேலும் அவர் இல்லாததை அவர்கள் தெளிவாக உணர்ந்தனர். ஷதாப் கான் மற்றும் ரவுஃப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர், ஆனால் கொழும்பில் கோலி மற்றும் ராகுல் அவர்களை வெளுத்து வாங்கினர்.
ODI வரலாற்றில் அதிக ரன்கள் :
சச்சின் டெண்டுல்கர் – 452 இன்னிங்ஸ்களில் 18426 ரன்கள்
குமார் சங்கக்கார – 380 இன்னிங்ஸ்களில் 14234 ரன்கள்
ரிக்கி பாண்டிங் – 365 இன்னிங்ஸ்களில் 13704 ரன்கள்
சனத் ஜெயசூர்யா – 433 இன்னிங்ஸ்களில் 13430 ரன்கள்
விராட் கோலி – 267 இன்னிங்ஸ்களில் 13000* ரன்கள்
47வது ஒருநாள் சதத்தை விளாசி, ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன்களை எட்டிய உலகின் 5வது கிரிக்கெட் வீரர் ஆன விராட் கோலிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ட்விட்டர் எக்ஸில், இன்று ஒரு மகத்தான சாதனை, விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார்! விளையாட்டில் உங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் விதிவிலக்கான நிலைத்தன்மையும் உங்களை ஒரு உண்மையான கிரிக்கெட் ஜாம்பவான் ஆக்குகிறது. அந்த ஓட்டங்களில் தொடர்ந்து பாய்ந்து எங்களை பெருமைப்படுத்துங்கள்! என்று தெரிவித்துள்ளார் .
மழையால் போட்டி மீண்டும் நிறுத்தம் :
இதையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கி ஆடி வந்த நிலையில், மீண்டும் மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக பக்கர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதலே பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும் சிறப்பாக பந்து வீசி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறச் செய்தனர். தொடர்ந்து பும்ரா தனது 5வது ஓவரில் இமாம் உல் ஹக்கை 9 ரன்களில் வெளியேற்றினார். அதனைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா தனது 11 வது ஓவரில் கேப்டன் பாபர் அசாமை (10 ரன்கள்) போல்ட் செய்து வெளியேற்றினார். பின்னர் பாகிஸ்தான் அணியில் பகார் ஜமான் (14) மற்றும் முகமது ரிஸ்வான் (1) இருவரும் ஆடி வந்தனர். அப்போது மீண்டும் மைதானத்தில் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி 11 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்களுடன் உள்ளது. தற்போது மழை நின்றுள்ளதால் சிறிது நேரத்தில் போட்டி தொடங்கலாம்..
A monumental achievement today as @imVkohli crosses the 13,000-run mark in ODIs! Your unwavering commitment and exceptional consistency in the game make you a true cricketing legend. Keep those runs flowing and continue making us proud! 🇮🇳 pic.twitter.com/qS1UIZXEa4
— Jay Shah (@JayShah) September 11, 2023